கறுப்பின பெண்ணிற்கு தாலி கட்டிய தமிழர் : பட்டுப் புடவையில் ஜொலித்த மணப்பெண்!!

1153

தமிழகத்தில்..

நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து பாரம்பரிய முறையில் தமிழர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழகத்தின் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் திருமால்பிரசாத் (28). இவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வருகிறார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஐதராபாத்தில் உள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது, நைஜீரியவுக்கு பணி நிமித்தமாக அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அந்த நாட்டிலுள்ள லாகோஸ் நகரைச் சேர்ந்த 25 வயதாகும் பட்ரிசியா இஃயின் எஜே என்ற இளம் பெண் மீது காதல் வசப்பட்டார்.

பட்ரிசியாவின் தோற்றமும் அழகும் நொடி நொடிக்கு மூச்சுக்காற்றாய் இதயத்தை உரசியதால், திருமால்பிரசாத் ஒருநாள் அவரிடம் சென்று மனம் திறந்து தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பட்ரிசியாவுக்கும் திருமால்பிரசாத்தைப் பிடித்து போக இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் அளவுக்கு காதலித்து வந்தனர். இந்த நிலையில், ஜேர்மனியில் பணிபுரிவதற்காக திருமால்பிரசாத் சென்றுவிட்டார். ஆனாலும், அவர்களுக்கு இடையேயான காதலும், அன்பும் கொஞ்சம்கூட குறையவில்லை.

திருமணம் செய்து கொண்டு இணைந்து வாழ முடிவெடுத்த இருவரும், அது குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறி புரிய வைத்தனர். அவர்களது பெற்றோர் ஒப்புதலும் கிடைத்தது. பட்ரிசியா இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.

இதை தனது காதலனிடம் தெரிவித்தார். அதன்படி இவர்களது திருமண ஏற்பாடு மணமகனின் சொந்த ஊரான‌ வாலாஜாவில் செய்யப்பட்டது. இதற்காக மணமகள் பட்ரிசியா நைஜீரியாவில் இருந்து தனது அண்ணன் சிபுஸேர்வாலண்னைடன்எஜெ என்பவருடன் நேற்று முன்தினம் வாலாஜா வந்தார்.

அங்குள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று முன் தினம் இரவு மணமக்கள் வரவேற்பு மேளதாளத்துடன் நடந்தது. இதையடுத்து நேற்று காலை திருமண விழா சிறப்பாக நடந்தது.

கைகளில் மெஹந்தி, வளையல்கள் அலங்கரிக்க புடவை உடுத்தி மணமேடையில் அமர்ந்த பட்ரிசியாவின் கழுத்தில் தாலி கட்டி மணமாலை சூடினார் திருமால்பிரசாத். கூடியிருந்த உறவினர்களும், நண்பர்களும் மலர்த்தூவி இருவரையும் வாழ்த்தினர்.

திருமால்பிரசாத் கூறுகையில், நான் காதலிக்கும்போதே பட்ரிசியாவிடம் என் பெற்றோரும், என் அக்காவும் வீடியோ அழைப்பில் பேசுவார்கள். தமிழ் மொழியை பேசவும், படிக்கவும் தற்போது கற்று கொண்டுள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.