இலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்கள் மீது 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2007ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பில் 12229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயிரம் பெண்களில் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் வடக்கில் 119 பாலியல் வன்முறைச் சம்பவங்களும், 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் 256 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பத்து பேர் இராணுவ உத்தியோகத்தர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை வடக்கில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 17 இராணுவ உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





