காணாமல் போன பிரபல YOUTUBER சிறுமி.. தேடும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்த பெற்றோர்!!

397

மகாராஷ்டிராவில்..

பெற்றோர் திட்டியதால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய யூடியூபர் சிறுமி மீட்கப்பட்ட காட்சி அவரது யூடியூப் பக்கத்திலே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் காவியா யாதவ். 16 வயது சிறுமியான இவர், சொந்தமாக ‘Bindass Kavya’ என்ற Youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார். சுமார் 44 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ள இந்த சேனலை காவ்யாவின் தாயார் நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் சண்டையிட்டு காவ்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அவர்கள் வழக்குப்பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் மனம் கேட்காத பெற்றோர்கள் ஒரு பக்கம் காவ்யாவை தேடி வந்தனர். மேலும் காவ்யாவின் Youtube சேனலில் தங்கள் மகள் காணவில்லை என்றும், யாராவது பார்த்தல் உடனே தகவல் தெரிவிக்குமாறும் பெற்றோர்கள் கண்ணீருடன் கேட்டுக்கொண்டனர்.

அதோடு அவர்கள் தேடும்போது தங்களது Youtube தளத்தில் அதனை நேரடி ஒளிபரப்பும் செய்தனர். ஒரு பக்கம் பெற்றோர்கள் தேட, மறுபக்கம் காவல்துறையினர் இரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று வலைவீசி தேடி வந்தனர்.

அப்போது மத்திய பிரதேச மாநிலம் இதர்சி பகுதியிலுள்ள இரயில் நிலையத்திற்கு வந்த ஒரு இரயிலில் காவ்யா இறங்கியுள்ளார். இதனை கண்ட இரயில்வே காவல்துறையினர் உடனே அவரை பிடித்து தங்களது காவலில் வைத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலையறிந்த பெற்றோர்கள் உடனே தங்கள் மகளை மீட்பதற்காக அவுரங்காபாத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு சுமார் 500 கி.மீ., பயணித்து தங்கள் மகளை மீட்டனர். இந்த காட்சிகளை தங்கள் Youtube பக்கத்தில் பெற்றோர்கள் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

பரபரப்பான இந்த காட்சிகள் Youtube பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததை சுமார் 44 லட்ச பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் மகளை மீட்க சென்றுள்ளதை நேரலையில் பார்த்த இணையவாசிகள் மத்தியில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.