இஷாலினி உயிரிழப்பு சம்பவம் “தங்கை வீட்டுக்கு சென்றால் தகவல் வெளியாகும் என்று எரித்து இருக்கலாம்” : சகோதரர் சாட்சியம்!!

562

இஷாலினி..

தங்கை வேலை செய்த வீட்டில் அவருக்கு ஏதோ பிரச்சினை நடந்துள்ளது எனவும் அவர் வீட்டுக்கு வந்தால், அவை வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் தங்கைக்கு இந்த நிலைமையேற்பட்டிருக்கலாம் எனவும்,

முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த இஷாலினியின் சகோதரர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் நேற்று நடைபெற்ற மரண விசாரணையில் சாட்சியமளிக்கும் போது கூறியுள்ளார்.

மரண விசாரணை சாட்சியங்கள் நேற்று விசாரிக்கப்பட்ட போதே சாட்சியாளரான விக்னேஸ்வரன் திருபிரசாத் இதனை கூறியுள்ளார்.
“றிசார்ட் பதியூதீனின் பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் தங்கை வேலை செய்து வந்தார். அப்போது தனக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அம்மாவிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.

தங்கை வைத்தியசாலையில் இருப்பதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 3 ஆம் திகதி அம்மாவுக்கு பொரல்லை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

நான் தங்கையை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றேன். பார்க்கவிடவில்லை. அதே மாதம் 15 ஆம் திகதி எனது தங்கை உயிரிழந்தார். தீயில் எரிந்து எனது தங்கை உயிரிழந்துள்ளார்.

தனக்கு பிரச்சினை இருப்பதாக தங்கை கூறிய போது 2021 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி வந்து அழைத்துச் செல்வதாக அம்மா கூறியிருந்தார்.

இதனிடைலேயே தங்கை தீக்காயங்களுக்கு உளளாகியுள்ளார். தங்கை வேலை செய்த வீட்டில் தங்கைக்கு பிரச்சினை நடந்துள்ளது. அவர் வீட்டுக்கு சென்றால், அவை வெளியாகி விடும் என்பதால் இப்படி செய்துள்ளனர் என நான் நினைக்கின்றேன். இது சம்பந்தமாக நான் பொலிஸாரிடமும் வாக்குமூலம் வழங்கியுள்ளேன்” என விக்னேஸ்வரன் திருபிரசாத் கூறியுள்ளார்.

“எனது மகள் வேலை செய்த காலத்தில் தனக்கு பிரச்சினை இருப்பதாக என்னிடம் கூறினார். இறுதியாக என்னிடம் பேசும் போது பொறுத்திரு நான் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறினேன்.

எனது மகள் அந்த வீட்டுக்கு வேலைக்கு சென்ற பின்னர் ஒரு நாள் கூட விடுமுறையில் வீட்டுக்கு வரவில்லை. நாங்களும் அவரை பார்க்க அங்கு சென்றதில்லை.

மகள் எரிக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் இருப்பதாக பின்னர் அறிந்துக்கொண்டேன். நாங்கள் மகளை பார்க்க சென்றோம். வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம் மகளுக்கு தையல் போடப்பட்டிருந்தது.

ஜூலை 15 ஆம் திகதி எனது மகள் இறந்து போனாள். நான் மரண விசாரணைகளில் கலந்துக்கொள்ளவில்லை. நன்றாகவே எனது மகள் வீட்டில் இருந்து சென்றார். அவளுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.

வீட்டில் இருந்த காலத்தில் எனது மகளுக்கு எந்த காதல் தொடர்பும் இருக்கவில்லை” என இஷாலினியின் தாய் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-