கடல் வழியாக வந்த தங்கம் சிக்கியது!!

626

Gold

இந்திய – இலங்கை கடல் வழியானது தமிழக மீனவர்களுக்கு எப்போதும் துயரம் தரக்கூடியது. ஆனால், தங்கக் கடத்தல்காரர்களுக்கு இதுதான் சொர்க்கவாசல். பெட்ரோல், டீசல், இரும்புக் குண்டுகள் மட்டும் வந்த அந்த வழி, இப்போது தங்கக்கட்டிகள் கடத்தும் பாதையாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணம் தான் சென்னை, சேப்பாக்கத்தில் சிக்கியிருக்கும் தமீம் அன்சாரி.

ஏப்ரல் 29ம் திகதி காலை சென்னை சேப்பாக்கத்தில் தமீம் அன்சாரி என்பவரின் வீட்டை முற்றுகையிட்டனர் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள். அதன் பிறகு, திருவல்லிக்கேணி பொலிஸாரை சம்பவ இடத்துக்கு அழைத்தனர். அதுவரை வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்த அன்சாரி, பொலிஸ் வந்ததும் அமைதியாகி வழிவிட்டார்.

அன்சாரி வீட்டுக்குள் அதிகாரிகள் நுழைந்த அடுத்த சில மணி நேரங்களில், வீட்டுக்குள் இருந்து 33 கிலோ தங்கக்கட்டிகளைக் கைப்பற்றினர். இதன் மதிப்பு 9 கோடியே 91 லட்சம் என்பது வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் கணிப்பு.

அன்சாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்துக்கு எந்தவிதமான ஆவணங்களோ, கணக்கு வழக்கோ அவரிடம் இல்லை. இதையடுத்து அன்சாரி மற்றும் அந்த நேரத்தில் அவருடன் இருந்த ரகுமான் ஆகிய இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம். தங்கத்தின் விலை இந்தியாவில் தாறுமாறாக உயர்ந்து விட்டது. ஆனால், பக்கத்து நாடுகளான இலங்கை, சிங்கப்பூரில் அதன் மதிப்பு ஒரு கிராமுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் வரை குறைவு.

குறிப்பாக சிங்கப்பூரில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,479 ரூபாய். இலங்கையிலும் கிட்டத்தட்ட அதே விலைதான். இப்படி இலங்கை மற்றும் சிங்கப்பூர் தங்கத்தை கிலோ கணக்கில் வாங்கி அவற்றை வரி எதுவும் செலுத்தாமல் இந்தியாவுக்குள் கொண்டுவந்து விட்டால், இங்கே கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம். ஒரு கிலோ தங்கத்தைக் கடத்தி விற்பனை செய்வதன் மூலம் மூன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும்.

சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்த விரும்புபவர்களும் நேராக இந்தியாவுக்குள் வருவது இல்லை. இங்கு விமானநிலையத்தில் ஐந்து அடுக்குச் சோதனை உள்ளது. அதைத்தாண்டி அவர்கள் கடத்தல் பொருட்களைக் கொண்டுவருவது சிக்கல். அதனால், சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குச் செல்கிறார்கள்.

இலங்கையில் இருந்து தங்கத்தைக் கடத்தும் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு, கடல் மார்க்கமாக கோடியாக்கரை வழியாக தமிழகம் கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து தனியார் பேருந்து பார்சல் சேவைகள் மூலம் எளிதாக எல்லா இடங்களுக்கும் தாராளமாகச் சென்றுவிடுகின்றன.

அதுபோல சர்வதேச விமானநிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடு, உள்நாட்டு விமான நிலையத்தில் இருப்பது இல்லை. இதைப் பயன்படுத்தி தங்கத்தை உள்நாட்டுக்குள் எளிதாக கடத்திச் செல்கின்றனர். அதனால்தான் இப்போது உள்நாட்டு விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தியிருக்கிறோம்.

ஒரு மாதத்துக்கு கிட்டத்தட்ட 3,000 கிலோ தங்கம் கடத்தப்படுகிறது. நாங்களும் அவர்களை முடிந்தவரையில் கண்டுபிடித்து தடுத்து வருகிறோம் என்று சொன்னவர்கள்,

தமீம் அன்சாரி ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். அதுபற்றியும் விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்த பிறகு மற்ற விவரங்களை வெளியிடுவோம்.

இப்போது சிக்கியிருப்பது சின்ன மீன்தான். கூடிய சீக்கிரம் இதில் பெரிய திமிங்கலம் வரை மாட்டும் என்றும் சொல்கிறார்கள்.

இதுபற்றி தங்க வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் தெரிவிக்கையில்,

சிங்கப்பூர், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தங்கத்துக்கு இறக்குமதி வரி கிடையாது. அதனால், அந்த நாடுகளில் விலை குறைவாக உள்ளது. ஆனால், நம்முடைய நாட்டில், நாம் வாங்கி உள்ளே கொண்டுவரும் தங்கத்துக்கு 10 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

அதைக் கட்டுவதால் லாபத்தில் ஏற்படும் இழப்பை விரும்பாத வியாபாரிகள் கடத்தல்காரர்கள், ஹவாலாப் பேர்வழிகளின் உதவியை நாடுகின்றனர். அவர்கள் கமிஷன் வாங்கிக்கொண்டு, இந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர்

நம்முடைய நாடு மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளது. விமானத்தின் மூலம் கடத்துவது மிகவும் கடினம். அதனால், எல்லையற்ற கடல் வழிதான் எப்போதும் கடத்தல்காரர்களின் தேர்வாக உள்ளது என்றார். இப்படி வரும் பணம் தவறான வழிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் பொலிஸ் இப்போது விசாரிக்க ஆரம்பித்து உள்ளது!

-விகடன்-