6வது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் 7 ஆவது திருமணத்திற்கு தயாரான பெண் : இறுதியில் நடந்த விபரீதம்!!

367

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த கள்ளிப்பாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கும், சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆம் தேதி திருமணமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்த திருமணத்தை புரோக்கர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் இருவர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு பிறகு தனது புது வாழ்க்கையை தொடங்கி வாழ்ந்து வந்துள்ளார் தனபால். அப்படி இருக்கையில், திருமணம் முடிந்து இரண்டு நாள் கழித்து தனபாலுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. இதற்கு காரணம், புது பெண்ணான சந்தியா வீட்டில் இருந்து மாயமானது தான்.

தொடர்ந்து, மனைவியின் செல்போன் எண்ணிற்கு தனபால் அழைத்த போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், வீட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் திருமண புடவைகள் மாயமாகி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனையடுத்து, சந்தியாவின் உறவினர் மற்றும் புரோக்கர் உள்ளிட்டோரின் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக, இது பற்றி பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் தனபால் அளித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்த போது, மீண்டும் சந்தியாவின் புகைப்படம், புரோக்கர் ஒருவரிடம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தனபால், திட்டம் போட்டு மோசடி கும்பலை வரவழைக்க முடிவு செய்துள்ளார். அதன் படி, திருமணத்தை நடத்துவது போல செட் செய்து, சந்தியா உள்ளிட்டோரை திருச்செங்கோடு வர வைத்துள்ளார் தனபால்.

தொடர்ந்து, சந்தியா உள்ளிட்டோர் அங்கு திருமணத்திற்காக வந்ததும் அவர்களை சுற்றி வளைத்த தனபால் மற்றும் அவரது குடும்பத்தினர், அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக நடந்த போலீசார் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது. புரோக்கர்கள் மூலம் திருமணம் செய்து கொள்ளும் சந்தியா, ஒரு சில தினங்கள் மட்டுமே அவர்களுடன் இருந்து விட்டு, கடைசியில் கிடைக்கும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களுடன் தப்பி விடுவதை வழக்கமாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்கள் நடந்துள்ளதாகவும், 6 ஆவது திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் 7 ஆவது திருமணம் செய்ய வந்த போது வசமாக சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, சந்தியா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.