அறுவை சிகிச்சையின் போது கற்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

377

கோவையில்..

கோவை மின்தடை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு. கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஸ்வரன் – வான்மதி.

விக்னேஸ்வரன் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவி வான்மதியை கடந்த 21 ஆம் தேதி அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்துள்ளார்.

அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டரும் வேலை செய்யாததால் வான்மதிக்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது.

இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனையில் வான்மதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வான்மதியின் உயிரிழப்புக்கு அன்னூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாடு காரணம் என குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடம் அரசு தரப்பில் எவரும் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் திடீரென சுமார் 100 க்கும் மேற்பட்டோர் திடீரென அன்னூர் கோவை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா உள்ளிட்டோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் பூமா தலைமையில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்திரா, வட்டாட்சியர் சிவக்குமார்,டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் பெண் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அரசுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.