பெங்களூரில்..
இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகையான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது கணவருக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.
மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதோடு சுகேஷை திருமணம் செய்யவும் ஜாக்குலின் திட்டமிட்டு இருந்தது அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இவ்வழக்கில் ஜாக்குலின் ஜாமீன் கோரியிருந்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ரூ.50 ஆயிரம் ரொக்க ஜாமீன் வழங்கியது.