ரயிலில்..
ரயிலில் பசியுடன் இருக்கும் தன்னுடைய மகள்களுக்கு தந்தை ஒருவர் உணவை ஊட்டிவிடும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
தந்தையின் அன்பு பெரும்பாலும் விரிவாக பேசப்படுவதில்லை. அன்னையின் அன்பை உலகம் கொண்டாடும் அளவுக்கு தந்தையின் பாசம் பற்றி பலரும் பேசுவதில்லை. எழுதாத கவிதை போல தேங்கும் தந்தையின் அன்பு எப்போதும் செயல் வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது.
தாய்க்கும், குழந்தைகளுக்கும் அரணாக திகழும் தந்தைகள் தங்களுடைய சிறிய சிறிய செயல்களின் அடிப்படையிலேயே தங்கள் குடும்பத்தின் மீதும் குழந்தைகள் மீதும் உள்ள பாசத்தினை வெளிப்படுத்திவிடுகிறார்கள். அப்படியான நபர் ஒருவரின் வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் இரு சிறுமிகள் ஓடும் ரயிலில் அமர்ந்திருக்கிறார்கள். பொதுவாக நகரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிட வேண்டும் என்ற காரணத்தினால் காலை உணவை தவிர்த்துவிடுவதை நாம் பார்த்திருப்போம்.
அப்படி இந்த இரண்டு சிறுமிகளும் தங்களது காலை உணவை தவிர்த்து விட்டது போல தெரிகிறது. அப்படியான சூழ்நிலையில் தனது மகள்களின் பசியினை பொறுக்காத தந்தை டிபன் பாக்சில் உணவுடன் தனது மகள்களுடன் பயணம் செய்கிறார்.
ரயிலில் இருக்கையில் மகள்கள் அமர்ந்திருக்க, கீழே அமர்ந்திருக்கும் அந்த தந்தை உணவை தனது மகள்களுக்கு ஊட்டுகிறார். தந்தையின் அருகாமையில் பாதுகாப்பு உணர்வுடன் அமர்ந்திருக்கும் இரு சிறுமிகளும் சூழலை வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டே தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.
இந்த வீடியோ பதிவிடப்பட்டது முதலாக பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களுடைய தந்தை பற்றிய நினைவுகளை பதிவாக எழுதி வருகின்றனர்.