வவுனியாவில் 2050 ஆவது நாளைக் கடந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!!

375

2050 ஆவது நாளைக் கடந்த..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2050 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2050 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (01.10) ஈடுபட்டனர்.

இதன்போது ‘எல்லோரும் சிறுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வாக இருக்கிறார்கள். நாங்கள் சிறுவர் தினத்தை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றோம். நாம் 2050 நாளாக இருப்பது யாருக்கும் தெரியாதா? இன்று நாம் தெருவில் இருந்து கண்ணீர் விடுகின்றோம்.

எமது பிள்ளைகள் வராமையால் எங்களுக்கு நிம்மதி இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வந்து தீர்வு பெற்று தர வேண்டும். எமது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது தான் காணாமல் ஆக்கப்பட்டடார்கள்.

எங்களது கண்ணீர் பொல்லாத கண்ணீர். எமது தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தர வேண்டும். அவ்வாறு தராவிடின் எமது கண்ணீர் அவர்களை நிம்மதியாக இருக்க விடாது. எமக்கு நீதி வேண்டும்’ என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிங்களவர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகள் என வெளிப்படுத்தும் பதாதையையும், அமெரிக்க கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்டகப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்.