கொழும்பில் திருமணமான 17 நாட்களில் உயிரிழந்த இளம் பெண் : குடும்பத்தார் எடுத்துள்ள நடவடிக்கை!!

928

ஹர்ஷனி தர்மவிக்ரம..

கொழும்பு – வத்தளை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்தியரின் அலட்சியத்தால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனியார் வைத்தியசாலை ஒன்றின் கவனயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் ஹர்ஷனி தர்மவிக்ரமவின் உறவினர்கள் நேற்று (01.10) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்போது சட்டத்தரணிகளுடன் வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர் இது தொடர்பான முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது கவனக்குறைவால் உயிரிழந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி ஜா-எல, தெலத்துர பகுதியைச் சேர்ந்த புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற பெண் திருமணமாகி 17 நாட்களில் ஏற்பட்ட சிறு நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

இதன்போது வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் உயிருக்கு போராடி வந்துள்ளார்.

அதன் பின்னர் ராகம போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் அலட்சியத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில்,உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.