குரோம்பேட்டையில்..

சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் . இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ,இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் வசந்தி கணவரை பிரிந்து தாய் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் வசந்திக்கும் , அண்ணாநகரை சேர்ந்த மோசஸ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர்.

போதைக்கு அடிமையான மோசஸ் வசந்தி உடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மோசசை பிரிந்த வசந்தி மீண்டும் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். மோசஸ் வசந்தியின் வீட்டுக்கு வந்து அவரை சமாதானப்படுத்தி குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு சில தினங்களுக்கு முன்பு குடியேறினார்.

பின்னர் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . அத்துடன் வசந்தியின் மகளிடம் மோசஸ் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் , தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து வசந்தியை போனில் தொடர்பு கொண்ட மோசஸ் உன்னை பிரிந்து என்னால் வாழ முடியாது என்று கூற, அதற்கு வசந்தியோ உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் நீ என்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றால், உன் அப்பாவையும் , அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். ஆனால் வசந்தி அதை கண்டுகொள்ளாத நிலையில் தன்னுடைய ஃபோனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

இதையடுத்து வசந்தியின் பெற்றோரிடம் மோசஸ் தகராறு செய்ததாக தெரிகிறது. அத்துடன் தனது மகளை உன்னுடன் அனுப்ப முடியாது என்று ஆறுமுகமும், மஞ்சுளாவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் அவர்களை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.

வசந்தியின் அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா ஆறுமுகத்திடம் சமாதானமாக பேசிய அவர் இருவரையும் தான் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து வசந்தி எங்கிருக்கிறாள் என்று கேட்டு இருவரையும் கொடுமைப்படுத்தியுள்ளார்.

வசந்தி குறித்து எந்த தகவலும் தங்களுக்கு தெரியாது என்று இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டை வெளி பக்கமாக பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது தாய், தந்தையை ஃபோனில் வசந்தி போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது இருவரின் நம்பர்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது சகோதரியிடம் விவரத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டு போட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டுக்குள் துர்நாற்றம் வீசுவதும் தெரிந்தது. உடனடியாக சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு வசந்தியின் சகோதரர் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது மஞ்சுளாவும், ஆறுமுகமும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்களின் சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் விசாரணையில் மோசஸ் தான் இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதனால் போலீசார் மோசஸை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





