வவுனியா ஓமந்தையில் பயிற்செய்கைக்கு தயார்படுத்தப்பட்ட நிலத்தில் வனவளத் திணைக்களத்தால் மீள் மரநடுகை!!

531

ஓமந்தைப் பகுதியில்..

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் பயிற்செய்கை மேற்கொள்ள தயார் படுத்தப்பட்ட மேட்டு நிலத்தில் வனவளத் திணைக்களால் காடாக்குவதற்காக மீள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, கொந்தக்காரன்குளத்தின் பின்பகுதியாகவுள்ள விளாத்திக்குளம் பகுதியில் 1972 ஆம் ஆண்டு முதல் தோட்டப் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலங்களும், நெற் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களும் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டு பராமரிப்பின்றி காணப்பட்டது.

இதனால் அப்பகுதி பற்றைகள் மற்றும் முட் புதர்களால் மூடப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் மீள்குடியேறி மெல்ல மெல்ல தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி வரும் மக்கள் தற்போதைய,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய பயன்படுத்தப்படாத தமது நெல் மற்றும் மேட்டு நிலப் பயிற் செய்கை நிலங்களை அதிக பணத்தை செலவு செய்து மீள துப்பரவு செய்து தற்போது கால போக செய்கைக்கு தயார்படுத்தியுள்ள நிலையில்,

அப் பகுதிக்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் குறித்த நிலங்களை மீள காடாக்குவதற்கான மீள் மர நடுகை வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அப் பகுதியில் பரம்பரையாக மேட்டு நிலப் பயிற் செய்கை செய்து வந்த காணியின் ஒரு பகுதியில் மீள் மர நடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் மரநடுகையை மேற்கொள்வதற்காக அப் பகுதியில் மரக்கன்றுகளையும் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த காணிகளில் பெரும்போகத்தில் பயிற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் அனைவரையும் விவசாயம் மேற்கொள்ளுமாறு கூறியுள்ள நிலையில், தமது செய்கை நிலங்களை பயிற் செய்கைக்காக துப்பரவாக்கியுள்ளனர்.

ஆனால் வனவளத் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கை அம் மக்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.