வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவின் இளம்கலைஞர் தெரிவில் புறக்கணிக்கப்பட்ட வவுனியா மாவட்டம்!!

605

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா..

வடமாகாண பண்பாட்டு பெருவிழாவில் இளம்கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு விருது வழங்கல் நிகழ்வில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கலைஞர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவானது நேற்று முன்தினம் (29.10) யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இளம் கலைஞர் ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.

அதில் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை, சங்கானை, சண்டிலிப்பாய், நல்லூர், சாவகச்சேரி, யாழ் நகரம் உள்ளடங்களாக 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் என 12 பேருக்கு இளம்கலைஞர் ஊக்குவிப்பு விருது வழங்கப்பட்டது.

வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மடாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இளம் கலைஞர் ஊக்குவிப்பு விருது வழங்கப்படவில்லை.

குறிப்பாக வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோதகத்தர்களும் மாவட்ட செயலக அதிகாரிகளும் சரியான முறையில் மாவட்டத்தில் உள்ள இளம் கலைஞர்களது விபரங்களை அனுப்பி வைக்காமையே வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டமைக்கு காரணம் என கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் கலைஞர்களுடன் தொடர்பற்றவர்களாகவும், தமக்கு என குறிப்பிட்ட சிலரை வைத்துக் கொண்டு செயற்படுவதானாலும்,

மாவட்ட மற்றும் மாகாண மட்டத் தககல்களை கலைஞர்களுக்கு உரிய காலத்தில் வழங்காமையாலும் இளம் கலைஞர் விருதில் இருந்து வவுனியா மாவட்டம் விடுபட்டுள்ளதாக கலைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கலாசார பண்பாட்டு விழா பாரம்பரிய கலாசார பண்பாடுகளையும், கலைகளையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக வீதி ஊர்வலத்துடன் இடம்பெற்ற போதும்,

வவுனியா மாவட்ட கலாசார பண்பாட்டு விழா மாவட்ட செயலக வளாகத்திற்குள் முடங்கிய நிலையில் கலைஞர்களுக்கு முறையான அறிவித்தல்கள் வழங்கப்படாத நிலையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.