உழவு இயந்திர சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி: உதவச் சென்றவருக்கு நடந்த சோகம்!!

355

மன்னார்குடியில்..

ஓடிக் கொண்டிருந்த டிராக்டரில் இருந்து தவறி, கீழே விழுந்த 9ம் வகுப்பு மாணவன், சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியான சம்பவம் மன்னார்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கீழ நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களின், இரண்டாவது மகன் சுவேதன்(14) திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர் என்று சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்கள் கீழ நிம்மேலி கிராம மக்கள். பள்ளி முடிந்த பின்னர், கீழநெம்மேலி வயல்வெளியில் உள்ள பாலத்தின் அருகில் நின்று கொண்டிருந்த சுவேதன், அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(50) என்பவர், டிராக்டரில் நெல் ஏற்றிக் கொண்டு காய வைப்பதற்காக அந்த பகுதியைக் கடந்து செல்வதைப் பார்தான்.

சுவேதனைக் கடந்து சென்ற சிறிது தூரத்தில், டிராக்டரை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு டிராக்டரில் இருந்து கீழே இறங்கி பாண்டியன் சென்றார். பாண்டியன் நகர்ந்து சென்றதும், திடீரென டிராக்டர் தானாக நகர்ந்து செல்ல துவங்கியது.

இதனை கண்ட மாணவன் சுவேதன், டிராக்டரை நிறுத்துவதற்காக ஓடிச் சென்று டிராக்டர் மீது ஏறி பிரேக்கை அழுத்த முயன்றான். அப்போது நிலைதடுமாறி சுவேதன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்தான்.

அவன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த நேரத்தில் டிராக்டர் நகர்ந்து, டிராக்டரின் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடுவூர் போலீசார் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.