சவுதியில் புதுவகை வைரஸ் தாக்கத்திற்கு 109 பேர் பலி!!

307

Mers

சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ் எனப்படும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனால் மக்கள் நிமோனியா, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெர்ஸ் வைரஸ் பரவி வருகிறது. இதனால் நேற்று வரை 109 பேர் பலியாகி உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சவுதி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது..

ஜெட்டாவில் 25 வயது வாலிபர் ஒருவர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இறந்தார். இதேபோல் காசநோய், அனிமியாவால் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் மெக்காவில் காலமானார்.

இவர்களுடன் சேர்த்து மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 396 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் 4 வைத்தியர்கள் பணியை ராஜினாமா செய்து விட்டனர்.

நோயாளிகளிடம் இருந்து தங்களுக்கும் வைரஸ் தொற்றி கொள்ளும் என்ற பயத்தில் வைத்தியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் ஒட்டகங்கள் மூலம் மெர்ஸ் வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதுவரை தடுப்பு மருந்து இல்லை. இதனால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.