திருமணம் செய்ய மறுத்த காதலி..
காதலி தனது திருமண கோரிக்கையை நிராகரித்ததாகத் தெரிவித்து, மனமுடைந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ருஹுனு குமாரி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மஸ்கெலியா- ரதர்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கட்டுபெத்த சந்தியில் உள்ள கார் உதிரி பாகங்கள் கடையில் பணிபுரிந்த இளைஞர், தனது காதலியைத் தேடிச் சென்று, திருமண கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதனை விளையாட்டாக எடுத்துள்ள அவரது காதலி அதனை நிராகரித்ததையடுத்து, உடனடியாக காதலி முன்பாகவே சில மாத்திரைகளை விழுங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் தனது காதலியைத் தேடி அவர் தொழில் செய்யும் இடத்துக்குச் சென்ற இளைஞன், அந்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் அனுமதிப் பெற்று மலசலகூடத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து தனது உடலில் தீயைப் பற்றவைத்தவாறு வந்த அவர், காதலியை அணைத்துக்கொள்ள முற்பட்ட போது, வர்த்தக நிலைய உரிமையாளரால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வெளியே ஓடியுள்ள இளைஞன், மறுநாள் ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் யுவதி தீக்காங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.