வீதியில் சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த விபரீதம் : கதறியழுத உறவினர்கள்!!

493


ராமநாதபுரத்தில்..



மகள் கர்ப்பமானது கேட்டு குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது. அந்த சந்தோஷம் சில மாதங்கள் கூட நிலைக்கவில்லை. திடீரென சாலையில் குறுக்கே மாடு ஓடி வந்ததால், கர்ப்பிணி பெண் கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து மரணமடைந்தது உறவினர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.



ராமநாதபுரம், பார்த்திபனூர் அருகே உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பரின் மகள் சூரிய பிரியதர்ஷினி (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சூரிய பிரியதர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.




இந்நிலையில், கணவன் – மனைவி இருவரும் கடந்த 3ம் தேதி இரவு மோட்டார் பைக்கில் அண்டக்குடி கிராமத்திலிருந்து அவர்களுடைய வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனர்.


அப்போது கீழ்ப்பெருங்கரை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததால், மோட்டார் பைக் பிரபாகரனின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகே இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது.

இதில், கர்ப்பிணியான பிரியதர்ஷினி தண்ணீருக்குள் விழுந்தார். அவர் மீது இருசக்கர வாகனம் விழுந்ததால் மீண்டு எழ முடியாமல் நீரிலேயே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பிரபாகரன் காயம் அடைந்து மயங்கிய நிலையில் கரையில் கிடந்தார்.


சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்துள்ளார். மனைவியையும் மோட்டார் பைக்கையும் காணவில்லை என அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார். உடனே அனைவரும் கால்வாய்க்குள் இறங்கி தேடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சூரிய பிரியதர்ஷினியை சடலமாக மீட்டனர்.

பிரபாகரன் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரியதர்ஷினியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரபாகரன் – சூரிய பிரியதர்ஷினி மோட்டார் பைக் சென்ற போது, மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் பைக் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.