காதலியை கொன்று வீடியோ வெளியிட்ட காதலன்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

642

ஜபல்பூரில்..

இன்ஸ்டாகிராம் காதலி தன்னை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த காதலன் அவரை கொலை செய்து, பின்னர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் சில்பா. 22 வயதுடைய இளம்பெண்ணான இவர் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்துவார். எனவே இன்ஸ்டாகிராம் மூலம், இவருக்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்ற இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அது நட்பாக மாறி, பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் தொடர்ந்து நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் சில்பா பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இருவருடனும் பழகி வந்த சில்பா, இருவரிடமும் பணம் பறித்து வந்துள்ளார். அவ்வாறு அவர் இருவரிடமும் சுமார் ரூ.12 லட்சம் வரை பணம் பறித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே இந்த விவகாரம் அபிஜித் மற்றும் அவரது பார்ட்னருக்கு தெரிய வர, இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இதனால் கோபமடைந்த இருவரும் சில்பாவை கொல்ல நினைத்துள்ளனர்.

அதன்படி சில்பாவை அவரது பகுதியான மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரிலேயே ஒரு தனியார் விடுதியில் அபிஜித் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து தான் இங்கே வந்திருப்பதாகவும், சந்திக்க விரும்புவதாகவும் அபிஜித் சில்பாவிடம் கூறியுள்ளார். அவரும் இங்கே வந்துள்ளார்.

அப்போது அவருக்கு அறைக்கு சென்ற சில்பா திரும்ப வரவில்லை. ஆனால் தனது அறையை பூட்டி விட்டு அபிஜித்தும் வெளியே சென்றுள்ளார். சுமார் இரண்டு நாட்களுக்கு பிறகு அபிஜித் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அவரது அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது சில்பா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு உடனே தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து ஓட்டல் சிசிடிவியை சோதனை செய்தனர். அப்போது அபிஜித்தின் புகைப்படம் அதில் பதிவாகியிருந்தது.

இதனிடையே அபிஜித், தான்தான் கொலை செய்ததாகவும், கொலைக்கான காரணத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவானது பெண்ணை கொலை செய்த பிறகு எடுக்கப்பட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே அதை நீக்கியும் உள்ளார்.

இதையடுத்து கொலையை செய்தது அபிஜித் என்று கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.