ஒரே நாளில் கோச்சடையான் டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன!!

433

Kochadayan

ரஜினியின் கோச்சடையான் படம் நாளை மறுநாள் (9ம் திகதி) ரிலீசாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்கியது. ஒன்லைனிலும் முன் பதிவு நடந்தது.

முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் முண்டியடித்து ஒன்லைனில் முன்பதிவு செய்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

கோச்சடையான் உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 540க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர். கேரளாவில் 250 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 150 தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வருகிறது. கோச்சடையான் ரிலீசை ரஜினி ரசிகர்கள் விழாக்கோலமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். தியேட்டர்களில் ரஜினியின் முழு உருவ கட்அவுட்டுகள் வைத்துள்ளார்கள். கொடி தோரணங்கள், பேனர்களும் கட்டி உள்ளனர்.

சைதை பகுதி சார்பில் ஜோதி தியேட்டரில் நாளை பகல் 1 மணிக்கு ரஜினி கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்கின்றனர். அன்னதானமும் வழங்குகிறார்கள். காசி தியேட்டர், உதயம் தியேட்டர்களில் வானவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு 100 அடியில் பிரம்மாண்ட பேனரும் கட்டி உள்ளனர்.

மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் இந்தியாவில் வரும் முதல் அனிமேஷன் படம் என்பதால் கோச்சடையான் படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் இந்தி, தெலுங்கு நடிகர், நடிகைகள் முதல் நாளே படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.