உயிரே போனாலும் வேறு இடங்களுக்கு செல்ல மாட்டோம் : முள்ளிக்குள மக்கள் கண்ணீர்!!

503

M1 M2

உயிரே போனாலும் வேறு இடங்களில் குடியமர மாட்டோம், எமது சொந்த இடங்களுக்கு நாங்கள் திரும்ப வழிசெய்து தாருங்கள், என முள்ளிக்குள மக்கள் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளப் பிரதேசம் 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபோது அங்கிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இப்பிரதேசம் அதன் பின்னர் கடற்படையின் வடமேற்குக் கட்டளைப் பணியகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் இடம்பெயர்ந்த மக்களால் இன்னமும் தங்கள் சொந்த வாழ்விடங்களில் குடியமர முடியவில்லை.

முசலியில் மலைக்காடு என்னும் இடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் ஓலைக்குடில்களில் வாழ்ந்து வரும் இவர்களை, வடக்கு விவசாய அமைச்சர் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தனர். அம் மக்கள் மேலும் அமைச்சரிடம் தெரிவிக்கும்போது..

“முள்ளிக்குளத்தில் உள்ள எங்கள் காணிகளையும் வீடுகளையும் திருப்பிக் கேட்க மாட்டோம் என்று கையெழுத்து வைத்துத் தந்தால் நாங்கள் குடியேறுவதற்கு மாற்று இடங்களை ஓழுங்கு செய்து தருவதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் உயிரே போனாலும் வேறு இடங்களில் குடியமர மாட்டோம். எமது சொந்த இடங்களுக்கு நாங்கள் திரும்ப வழிசெய்து தாருங்கள்.

அங்கே 700 ஏக்கர்கள் அளவில் எங்களால் கைவிடப்பட்ட வயல்களும் உள்ளன. கடற்படை கையகப்படுத்தி வைத்திருக்கும் அந்த வயல் நிலங்களையாவது விடுவித்துப் பயிர் செய்வதற்காகவாவது அங்கு போய்வர அனுமதி வாங்கித் தாருங்கள்” என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

மேலும், “வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்துக்குக் குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள் எங்களை மட்டும் கண்டுகொள்கிறார்கள் இல்லை. எனவும் தெரிவித்தனர்.

படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்த விவசாய அமைச்சர், தற்போது அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருக்கும் புளியங்குளத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாகவும், கால்நடை வளர்ப்புக்கு உதவுவதாகவும் மக்களிடம் தெரிவித்தார்.