கிளிநொச்சி யுவதி..
கப்பலில் பணிபுரியும் 51 வயதுடைய திருமணமாகாத நபரிடம் இருந்து 85 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் 25 வயது அழகுக்கலைஞரான கிளிநொச்சி யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.
யுவதிக்கு எதிரான 51 வயதுடைய கப்பல் பணியாளரின் முறைப்பாட்டின் அடிப்படையி யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில்,
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் யுவதி அறிமுகமான நிலையில் இருவரும் நண்பர்களாகி மிகவும் நெருக்கமானதாகவும் கப்பல் பணியாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி கொரிய கப்பலில் பணிக்கு சென்றிருந்த போதிலும் அன்று முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரையான 6 மாதங்களில் சுமார் 85 இலட்சம் ரூபா யுவதியின் தேவைக்காக அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
பின்னர் யுவதியை சந்திப்பதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி இலங்கை வந்ததாகவும், காதலியை சந்திப்பதற்காக பம்பலப்பிட்டியில் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லை என்பதை அறிந்து கப்பல் பணியாள திடுக்கிட்டுளார்.
அதன் பின்னர் , குறித்த யுவதி ஒரு மாதத்திற்கு முன்னர் கிளிநொச்சியிலுள்ள கிராமப் பகுதிக்கு சென்றது தெரியவந்ததை அடுத்து கிளிநொச்சியிலுள்ள காதலியின் வசிப்பிடத்தைத் தேடிச் சென்றுள்ளார்.
எனினும் யுவதியின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த போதிலும் அதுவும் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ளதால் தனது வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் கிளிநொச்சி காதலியை திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன், பணம் கொடுத்த நிலையில் , அவர் தற்போது தன்னை ஏமாற்றுவதாக கப்பல் பணியாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இதன்படி, சந்தேகநபரான கிளிநொச்சி காதலியின் கையடக்கத் தொலைபேசி ஆராய்ந்த பின்னர், அவர் வசிக்கும் முகவரி அடையாளம் காணப்பட்டது.
அதையடுத்து, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில் யுவதி விசாரணைக்கு சமூகமளித்திருந்தார்.
விசாரணையின்போது, கப்பல் பணியாளரிடமிருந்து தான் பணத்தை பெற்றதை அவர் ஏற்றுக்கொண்டார். திருமணம் செய்யும் நம்பிக்கையில் இருந்ததாகவும், ஆனால் பழகிப் பார்த்த போது இருவருக்குமிடையில் பொருத்தம் ஏற்படாததால் கப்பல் பணியாளரை திருமணம் செய்யும் யோசனையை கைவிட்டதாகவும் கிளிநொச்சி யுவதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், யுவதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.