வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தற்காலிக பாவனைக்கு மாத்திரம் : விரைவில் மாற்று வசதிகளுடன் புதிய கட்டிடம்!!

678


பொருளாதார மத்திய நிலையம்..



வவுனியாவில் மொத்த மரக்கறி வியாபாராத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தொகுதி அமைக்கபடும் வரை தற்காலிகமாக வவுனியா பிராந்தியப் பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



வவுனியா நகரத்தில் நீண்ட காலமாக மொத்த வியாபாரத்தை நடத்தி வரும் இடத்தில் மொத்த வியாபாரிகளின் பங்களிப்புடன் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய நவீன கடைத் தொகுதியொன்றை பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கான கலந்துரையாடலொன்று கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஏற்பாட்டில்,




நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர் மற்றும் உயரதிகாரிகளின் பங்கேற்போடு வவுனியா மொத்த வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் (16) நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.


இதன்போது மொத்த வியாபாரிகளுக்கான புதிய கடைத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதால் இடைப்பட்ட காலத்திற்கு வவுனியா பிராந்தியப் பொருளாதார மத்திய நிலையத்தில் அவர்களின் மொத்த வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உடன்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையமாக 291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளையதினம் (19.11.2022) ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.