திருமணத்திற்கு இந்திய ராணுவத்தை அழைத்த தம்பதி : இணையத்தில் வைரலாகும் பதில் பதிவு!!

302


கேரளாவில்..



திருமணத்திற்கு அழைப்பு விடுத்த கேரள தம்பதிக்கு இந்திய ராணுவம் அதன் சமூக வலைதள பக்கத்தில் பதில் அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோடி இந்திய இராணுவத்திற்கு திருமண அழைப்பிதழை அனுப்பியது.



அந்த அழைப்பிதழுடன், திருமண தம்பதிகளான ராகுல் மற்றும் கார்த்திகா, ராணுவ வீரர்களுக்கு ஒரு சிறப்பு குறிப்பையும் அனுப்பியுள்ளனர், அது இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.




அந்த குறிப்பில், இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும், நாட்டுக்காக தியாகம் செய்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளனர். “அன்புள்ள மாவீரர்களே, நாங்கள் நவம்பர் 10 -ஆம் திகதி திருமணம் செய்து கொள்கிறோம். எங்களது நாட்டின் மீதான அன்பு, உறுதிப்பாடு மற்றும் தேசபக்திக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.


எங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். உங்களால், நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம். எங்கள் அன்புக்குரியவர்களுடன் எங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களைக் கொடுத்ததற்கு நன்றி.

உங்களால், நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறோம். நாங்கள் எங்கள் சிறப்பு நாளில் உங்களை அழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் வருகையையும் ஆசீர்வாதத்தையும் விரும்புகிறோம்.


எங்களை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழைப்பை இந்திய ராணுவம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளத்தில் வெள்ளிக்கிழமை பகிர்ந்துகொண்டது.

மேலும், தம்பதியின் அன்பான அழைப்பிற்கு பதிலளித்து, “நல்வாழ்த்துக்கள். திருமண அழைப்பிற்காக இந்திய ராணுவம் ராகுல் மற்றும் கார்த்திகாவுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது மற்றும் தம்பதியருக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அழகான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துகிறது. #TogetherForever” என்று வாழ்த்தியுள்ளது.

இந்தப் பதிவு பகிரப்பட்டதிலிருந்து, 87,500-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது. கருத்துகள் பிரிவில் பலர் இதய ஈமோஜிகளை பதிவிட்டுள்ளனர்.