விடுதி அறையில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு : கதறும் பெற்றோர்!!

374

தர்மபுரியில்..

வெறும் புத்தக படிப்பையும், மதிப்பெண்களை பெறுகிற மிஷின்களாக மட்டுமே நாம் ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோமோ என்கிற ஐயம் எழுகிறது. ஆசிரியர் திட்டினார், மதிப்பெண் குறைவு என்கிற காரணங்களை சர்வ சாதாரணமாக குழந்தைகள் தங்களது முன்னேற்றத்துக்கு எடுத்துக் கொண்ட காலம் போய், இப்போது உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருவது தொடர் கதையாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழி குமார். இவரது மகன் நிர்மல் குமார். வயது 25. இவர் சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பிசியோதெரபி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து, படித்து வந்தார். நிர்மல்குமாரை, தினமும் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அவ்வாறு வழக்கம் போல் காலையில் நிர்மல்குமாருக்கு செல்போனுக்கு பெற்றோர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவரது நண்பர் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பெற்றோர் தங்களது மகன் செல்போன் எடுக்காமல் இருப்பது பற்றி தெரிவித்தனர். உடனே நிர்மல்குமார் தங்கி இருந்த அறைக்கு சென்று நண்பர்கள் பார்த்தனர்.

அப்போது அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு நிர்மல்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதை கண்டு அதிர்ந்து போன நண்பர்கள் நிர்மல் குமாரின் பெற்றோருக்கும், ஆட்டையாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார், நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நிர்மல் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது மகன் நன்கு படித்து நல்ல நிலைக்கு வருவான் என்ற பல கனவுகளோடு காத்திருந்த பெற்றோர், மகனை சடலமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.