இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரட்ணவிற்கு ஒரு வருட போட்டித் தடை!!

244


சமிக்க கருணாரட்ண..இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்ணவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் இடம்பெற்ற ரி20 உலக கிண்ணப்போட்டி தொடரின் போது வீரர்களிற்கான ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பலவற்றை மீறியமை தொடர்பில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாமிக்கவிற்கு எதிராக மூன்று பேர் கொண்ட குழு ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய சாமிக்கவிற்கு ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன் 5000 அமெரிக்க டொலர் அபராதத்தையும் அறிவித்துள்ளது.


சாமிக கருணாரட்ண இழைத்த தவறுகளின் பாரதூர தன்மையை கருத்தில் கொண்டு விசாரணை குழு இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு குறிப்பிட்ட வீரர் எதிர்காலத்தில் மேலும் மீறல்களில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

விசாரணை குழு தெரிவித்த விடயங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கமைய, இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன் குறிப்பிட்ட தடை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இடைநிறுத்தப்பட்ட தடைக்கு மேலாக 5000 அமெரிக்க டொலர் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.