ஏழு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக, பொலிஸார் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் அலுத்கம பொலிஸார் பாரபட்சம் காட்டுவதாக, அலுத்கம நகரில் நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் தாயுடன் கடைக்குச் சென்றிருந்த வேளை குறித்த சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளான். தாம் கடையில் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒருவரால், தனது மகன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தாய் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் சிறுவன் சிறுநீர்கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவனது பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காது, இரு தரப்பினரும் சமாதானத்துடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளமையால், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.