பொல்கஹாவெல பிரதேசத்தில் புகையிரத சாரதி ஒருவர் மீது பயணிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். மஹாவ கொழும்பு 857ம் இலக்க புகையிரத சாரதி மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக இடம்பெற்ற புகையிரத விபத்துக்கள் தொடர்பில், புகையிரத சாரதிகளுக்கு எதிராக சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புகையிரத சாரதிகள் ஒத்துழையாமை அல்லது சட்டத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மறைமுகமாக ஆரம்பித்துள்ளனர்.
மைல் கற்களில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்திலேயே புகையிரதத்தைத் செலுத்துதல், சமிக்ஞைகளை மிகவும் நுட்பமாக அவதானித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புகையிரத சாரதிகள் சட்டத்தின் அடிப்படையில் கடமையாற்றி வருகின்றனர்.
இவ்வாறு சாரதிகள் கடமையாற்றுவதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக அலுவலகம் செல்லும் பயணிகள் உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அநேகமான புகையிரதங்கள் குறித்த நேரத்திற்கு உரிய இடத்தை சென்றடைவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை விடவும் ஆபத்தான வழிகளில் புகையிரத சாரதிகள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சாரதி மீதான தாக்குதல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.