இலங்கையில் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலை வைத்தியர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 30 வீதமான ஆண்களும், 4 வீதமான பெண்களும் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டினால் ஆண்டு தோறும் 20000 பேர் வரையில் உயிரிழக்கின்றனர்.
18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை புகைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் புகைப்பிடித்தல் காரணமாக நோய் ஏற்படும் நபர்கள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நட்டஈடு பெற்றுக்கொள்கின்றனர்.
இலங்கையிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை விடவும் புகைப்பிடித்தல் காரணமாக உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
புகைத்தல் பழகத்தை இல்லாதொழிக்க கட்சி, மதஈ இன பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சிகரட் பக்கட்டுக்களில் படங்களின் மூலம் எச்சரிக்கையிடுவது சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.