ஆடையின்றி நிற்க வைக்கப்பட்ட இங்கிலாந்து ரசிகர் : உலக கோப்பையில் எல்லை மீறும் கத்தார் அதிகாரிகள்!!

828


கத்தாரில்..இங்கிலாந்து கால்பந்து ரசிகர் ஒருவரை கத்தார் அதிகாரிகள் முழு நிர்வாணமாக்கி பரிசோதனை செய்து இருப்பது உலக கோப்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வரும் வளைகுடா நாடான கத்தார், மைதானத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் சின்னங்கள் பயன்படுத்த சமீபத்தில் தடை விதித்தது.
ஆனால் கத்தாரின் இந்த திடீர் விதிகளுக்கு உலக நாடுகள் மற்றும் உலக கால்பந்து ரசிகர்கள் முழுமையான எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, Fifa கால்பந்து அமைப்பு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு தன்பாலின ஈர்ப்பாளர்களின் சின்னங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது.


இருப்பினும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்பது வளைகுடா நாடான கத்தாரில் சட்டவிரோதமானதாக இருப்பதால், போட்டி முழுவதும் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பல அத்துமீறல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அல் பேட் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்ற நெதர்லாந்து vs கத்தாருக்கு கால்பந்து போட்டிக்கு முன்னதாக லண்டனை சேர்ந்த இங்கிலாந்து அணி ரசிகர் அந்தோணி ஜான்சன் என்பவர் ரெயின்போ பேஸ்பால் தொப்பியை அணிந்து இருந்ததால் கத்தார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதை தொடர்ந்து அவர், தான் கத்தார் அதிகாரிகளால் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து iசெய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார். அதில் தான் ஸ்டேடியத்தின் முக்கிய பாதுகாப்பு பகுதிக்கு வந்தபோது, என்னிடம் கடந்த எட்டு போட்டிகளில் இல்லாத எனது கடிகாரத்தையும், பெல்ட்டையும் கழற்றும்படி என்னிடம் கூறப்பட்டது.

அதையடுத்து நான் மீண்டும் மைதானத்திற்குள் சென்ற போது, மூத்த பாதுகாவலர் என் முகத்துக்கு நேராக வந்து “எங்கள் கலாச்சாரத்தை மதிக்கவில்லை” என்று கத்தினார், அத்துடன் அவர்கள் என்னை கீழே தள்ளினார்கள்.

மேலும் என்னிடம் உலோகம்(சந்தேகத்திற்குரிய பொருள் அல்லது ஆயுதம்) இருப்பதாக கூறி, என்னை ஒரு தனிப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர்கள் முதலில் எனது ஷார்ட்ஸ் மற்றும் காலணிகளை கழற்றவும், பின்னர் என் பேண்ட்டை கீழே எடுக்கவும் உத்தரவிட்டார்கள், பின் எனது உள்ளாடைகளை அகற்ற சொல்லி முழு நிர்வாணமாக நிற்க சொன்னார்கள்.

எனது உடல் மற்றும் உடைமைகளை முழுவதும் சோதித்த அவர்கள் இறுதியில் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள், ஏனென்றால் அவர்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியாது என்பது எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

10 நிமிடங்கள் நீடித்த இந்த சோதனையின் முடிவில், ஃபிபா என்ன சொல்கிறது என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, மைதானத்தில் என்ன வர வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.