திருமண வீட்டில் பசி போக்க அழையா விருந்தாளியாக நுழைந்த இளைஞருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

519

பிஹாரில்..

திருமண வீட்டில் அழையா விருந்தாளியாக நுழைந்து மாணவர் சாப்பிட்ட நிலையில் மணமகன் அன்போடு வரவேற்ற வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹாரின் பாகல்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அலோக் யாதவ், தனது பசியை போக்க அங்கு நடைபெற்ற திருமண விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்தார். பந்தியில் அமர்ந்து வயிறார சாப்பிட்டார்.

அதோடு மணமக்களையும் மனதார வாழ்த்த மேடையேறினார். நான் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறேன். அதிக பசியாக இருந்தது. அழையா விருந்தாளியாக இங்கு வந்து வயிறார சாப்பிட்டுவிட்டேன். மனச்சாட்சி உறுத்தியதால் உங்களிடம் உண்மையை கூறுகிறேன்.

உங்களது திருமணத்துக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார். கல்லூரி மாணவர் அலோக் யாதவ் கூறியதை இன்முகத்தோடு கேட்டு ரசித்த மணமகன் அதுல் ராஜக், உங்கள் விடுதிக்கும் உணவை எடுத்துச் செல்லுங்கள்” என்று அன்பு கட்டளையிட்டார். மணமகனின் அன்பான உபசரிப்பால் மாணவர் இன்ப அதிர்ச்சி அடைந்து நெகிழ்ந்து போனார்.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் பசியை போக்க திருமண வீட்டில் நுழைந்து பந்தியில் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது மணமக்களின் உறவினர்கள், அந்த மாணவரை பிடித்தனர்.

“உன்னை யார் அழைத்தார்கள். எப்படி இலவசமாக சாப்பிடலாம் என்று வசைபாடி அந்த மாணவரை பாத்திரங்களை கழுவ செய்து தண்டனை கொடுத்தனர். அப்படி ஒரு மனிதநேயமில்லாத சம்பவம் நடந்த சில நாட்களில் பீகாரில் இப்படியொரு மனித நேயத்தை போற்றும் சம்பவம் நடந்துள்ளது.