வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்த கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!! 

557


ஆர்ப்பாட்டம்..மெனிக்பாமிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் (05.12.2022) முன்னெடுக்கப்பட்டிருந்தது.மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்றையதினம் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்த நிலையிலே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கடவையில் நான்கு, ஐந்து விபத்து சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் அண்மையில் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறித்த கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், குறித்த கடவையினூடாக பாதுகாப்பற்ற போக்குவரத்தை தாம் மேற்கொண்டு வருவதாகவும்,

அத்தோடு புகையிரதம் சீரான நேரத்தில் வருகை தராததால் எந்த நேரத்தில் புகையிரதம் வரும் என்று தெரியாத நிலையிலே குறித்த பாதையினூடாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


புகையிரத கடவையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7500 ரூபா மாத்திரமே ஊதியமாக வழங்கப்படுவதால் யாரும் குறித்த பணிக்கு செல்ல விரும்புவதில்லை என குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த பறயனாளங்குளம் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி குறித்த கடவையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து மூவர் விண்ணப்பித்துள்ளாதாகவும்,

அதற்குரிய நடவடிக்கையை மிக விரைவில் எடுப்பதாகவும், சமிக்ஞை விளக்கினை பொருத்துவதற்கு புகையிரத திணைக்களத்திற்கு தாம் சிபார்சு செய்வதாகவும்,

மக்களையும் எழுத்து மூலமான கோரிக்கை கடிதத்தை புகையிரத திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்தார். குறித்த போராட்டமானது சுமார் ஒரு மணித்தியாலயமாக இடம்பெற்றிருந்தது.