திருத்தணியில்..
காதலிச்சு, மனசுக்குப் பிடிச்சவனையே திருமணம் செய்த மாலினி, நாலே மாசத்துல காதலித்தவனின் சுய ரூபம் தெரிந்து தூக்குல தொங்கிட்டாளே என மாலினியின் மரணத்துக்கு திரண்டிருந்த மொத்த கூட்டமும் கதறியழுதது.
திருத்தணி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டார் மாலினி. இந்நிலையில், திருமணமான 4 மாதத்திற்குள் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவருக்கும் செருக்கனூர் கிராமத்தை சேர்ந்த மாலினி (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக மாலினியின் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் அகூர் கிராமத்திலேயே இருவரும் வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த மாலினி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார், மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாலினியின் தந்தை தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நடந்து 4 மாதங்களுக்குள் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட காரணத்தால், வட்டாட்சியர் தலைமையிலான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.