வவுனியா மாவட்டத்தில் 5326 விவசாயிகளிற்கு இலவசமாக உரம் வழங்கி வைப்பு!! 

528


உரம்..வவுனியா மாவட்டத்திலே 2.5 ஏக்கருக்கு குறைவான அளவில் நெற் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் 5326 விவசாயிகளிற்கு இலவசமாக உரம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயிகள் தங்களிற்கு தேவையான உரத்தினை பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்ததுடன், தனியார்துறையினரிடம் இருந்து அதிக விலை கொடுத்து உரத்தினை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் காணப்பட்டது.
இந்நிலையில் யுஸ்எய்ட் நிறுவனத்தின் பங்களிப்புடன் நாடு பூராகவும் உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள கமநல சேவை நிலையங்களின் ஊடாக இலவசமாக உரம் வழங்கி வைக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலே கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 09 கமநல சேவை நிலையங்களில் இலவசமாக உரம் வழங்கி வைக்கப்படவுள்ள நிலையில்,

இன்றையதினம் கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், 535 விவசாயிகளிற்கு இலவசமாக உரம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் கோவில்குளம் கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்திர் திருமதி ரெ.காஞ்சனா, விவசாய ஆராச்சி உற்பத்தி உதவியாளர் பதூர்தீன் ஹஸ்புல்லா மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.