முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் வீட்டுத்திட்டப் பகுதியில் மனைவியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த கணவன், தானும் காட்டில் தற்கொலை செய்து கொண்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஜ் (30) , அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி (28) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து சென்ற கணவன், வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் சென்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருப்பதுடன், இவ்விடயம் தொடர்பாக அவர்களின் 3 வயதுப் பிள்ளை அயலவர்களுக்குத் தெரிவித்ததினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு சடலங்களையும் நீதவானின் உத்தரவிற்கமைய மீட்டு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





