சிறுநீரகத்தை விற்க முயன்று 16 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி!!

396

ஆந்திராவில்..

ஆன்லைன் திருட்டுக்களும், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து எத்தனையோ எச்சரிக்கைகள் விடுத்த பின்னும் இன்றைய இளம் தலைமுறையினர் அதை அலட்சியமாகவே பார்த்து விட்டு அவர்களின் இஷ்டப்படி நடக்கின்றனர். பல நேரங்களில் இதனால் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர்.

இதே போல் ஒரு சம்பவம் ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அதன்படி ஆஆந்திராவில் குண்டூர் மாவட்டம் பிரங்கிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் மாணவி ஒருவர் .இவர் தனது அப்பாவுக்கு தெரியாமல் அவரது வங்கிக் கணக்கில் ரூ80000 வரை பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார்.

இதனை அவரது தந்தை கண்டுபிடிப்பதற்குள் எப்படியாவது சம்பாதித்து வங்கி கணக்கில் செலுத்திவிட வேண்டும் என திட்டமிட்டு ஆன்லைனில் வேலை தேடிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் சிறுநீரகம் நன்கொடை அளித்தால் பணம் தருவதாக வந்த லிங்க்கை பார்த்து அதனை க்ளிக் செய்தார். இதில் கேட்ட அனைத்து தகவல்களையும் பதிவிட்டு தனது சிறுநீரகத்தை நன்கொடை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மர்மநபர்கள் சிலர் ஆன்லைனில் கல்லூரி மாணவியை தொடர்பு கொண்டு அறுவை சிகிச்சைக்கு முன்பு 3 கோடி ரூபாயும் சிகிச்சைக்கு பின்னர் 3 கோடி ரூபாயும் தருவதாக கூறினர். இதனை கல்லூரி மாணவி உண்மை என நம்பினார். இதன் அடிப்படையில் அவர்களே சிட்டி பேங்க்கில் கல்லூரி மாணவி பெயரில் போலிக் கணக்கை தொடங்கி அதில் 3 கோடி ரூபாய் செலுத்தி இருப்பதாக கூறினர்.

இந்த போலி வங்கி கணக்கு எண்ணை கல்லூரி மாணவியின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பினர். அதே நேரத்தில் இந்த பணத்தை உபயோகப்படுத்த போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் மற்றும் வரி செலுத்த வேண்டும் எனக் கூறினர்.

இதனை நம்பி கல்லூரி மாணவி தனது தந்தை வீடுவாங்க வைத்திருந்த ரூ20 லட்சம் வைத்திருந்த வங்கி ஏ.டி.எம்.மில் தந்தைக்கு தெரியாமல் எடுத்து ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் ரூ16 லட்சம் வரை செலுத்தி உள்ளார்.

ஒரு நாள் மாணவியின் தந்தை வங்கியில் பணம் எடுக்க சென்ற போது வங்கி கணக்கில் ரூ 4 லட்சம் மட்டும் இருப்பதாகவும் மற்ற பணத்தை பயன்படுத்தி விட்டதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மாணவியை உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறினார். உண்மை தெரிந்துவிடுமோ எனப் பயந்து போன மாணவி தனது தோழி வீட்டிற்கு சென்று விட்டார்.

அதே வேகத்தில் ஆன்லைன் மோசடிக்காரர்களுக்கு போன் செய்து மாணவி தான் சிறுநீரகம் விற்கவில்லை எனவும் உடனே தனது பணத்தை திருப்பித் தரும்படியும் கேட்டார்.

டெல்லிக்கு நேரில் வந்து பணத்தை பெற்றுச் செல்லலாம் என மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி அவர்கள் சொன்ன முகவரிக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டதை கல்லூரி மாணவி உணர்ந்தார். இதற்கிடையில் மகளை காணாததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் மாணவியின் தந்தை.

இதன் அடிப்படையில் மாணவியின் செல்போன் சிக்னலை வைத்து மாணவி இருக்கும் இடத்தை அறிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விபரங்களை கேட்டறிந்த பிறகு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தந்தைக்கு தெரியாமல் செலவு செய்த ரூ80000 ஐ சம்பாதிக்க ரூ16லட்சத்தை கோட்டை விட்ட மகளைக் கண்டு அழுவதா, சிரிப்பதா என தந்தைக்கு தெரியவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.