மகாராஷ்டிராவில்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து இருக்கிறார். இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் ரிங்கி மற்றும் பிங்கி. மும்பையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
சிறுவயதிலிருந்தே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் வளர்ந்தவர்கள். என்றேனும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு இருவரும் பிரிய நேரிடும் என கருதிய இவர்கள் ஒரே நபரை திருமணம் செய்து கொண்டு பிரியாமல் வாழ்வது என முடிவு எடுத்திருக்கின்றனர்.
அதன்படி இவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான அதுல் அவ்தாதே என்பவரை திருமணம் செய்ய இருவரும் முடிவு எடுத்து இருக்கின்றனர். இதற்கு அதுல் மற்றும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக திருமணம் நடந்திருக்கிறது.
சோலாப்பூரில் ஒரே மேடையில் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இருவரையும் கரம் பிடித்தார் மாப்பிள்ளை அதுல். இந்த வீடியோ இணைய தளங்களில் படுவைரலாக பரவியது.
இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்த புது மாப்பிள்ளை அதுல் மீது ராகுல் பூலே என்பவர் புகார் கொடுத்திருக்கிறார். அதன்படி சோலாப்பூர் காவல்துறையினர் ஐ பி சி பிரிவு 494 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சட்டப்படி இந்த பிரிவின்கீழ் ஒருவரை விசாரிக்க நீதிமன்ற அனுமதியை பெறவேண்டும்.
இதனையடுத்து, நீதிமன்றத்தை போலீசார் நாடியுள்ளனர். அப்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 198 ஐ நீதிபதிகள் மேற்கோள் காட்டி, “இந்திய தண்டனைச் சட்டம் (திருமணம் தொடர்பான குற்றங்கள்) அத்தியாயம் 20ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை அதனால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் ஒழிய எந்த நீதிமன்றமும் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது” என்றனர்.
புகார் அளித்தவர் இந்த தம்பதிக்கு எந்த விதத்திலும் தொடர்புடையவர் இல்லை என்பதால் அவர் இந்த திருமணத்தால் எப்படி பாதிக்கப்பட்டார்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இந்த திருமணத்தால் பாதிக்கபட்ட நபர்கள் புகார் அளித்தால் மட்டுமே இந்த பிரிவின்படி அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முடியும் என நீதிபதிகள் கூறி காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றனர்.