இணையத்தில் ஆங்கிலம் படித்து பேஸ்புக்கில் இந்தோனேசிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!

416


உத்திர பிரதேசத்தில்..இரண்டு நபர்கள் காதலிப்பதற்கு ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, மொழி, இனம் உள்ளிட்ட எந்தவொரு விஷயங்களும் தடையாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.இவை அனைத்தையும் தாண்டி உன்னதமாக நிலைத்து நிற்கும் பல காதல்கள் ஜெயித்து சிறந்த முறையில் அவர்கள் வலம் வருவது தொடர்பான செய்தியை கூட நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில் ஒரு காதல் கதை குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தை சேர்ந்தவர் சன்வர் அலி.


இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த சமயத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த மிஃப்தாவுல் ஜன்னா என்ற பெண்ணும் பேஸ்புக் மூலம் சன்வர் அலிக்கு அறிமுகமானதாக சொல்லப்படுகிறது.

அப்போது, தான் கற்ற ஆங்கிலம் மூலம் ஜன்னாவிடம் பேச தொடங்கி உள்ளார் சன்வர். இந்தோனேஷியாவில் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வரும் மிஃப்தாவுல் ஜன்னா, பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது.


கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் தென்பகுதியில் புயல் வந்ததை அறிந்த மிஃப்தாவுல் ஜன்னா, சன்வர் அலி மற்றும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கேட்டு அறிந்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகமானதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில் தன்னுடைய காதலை முதன் முதலில் சன்வர் அலி மிஃப்தாவுல் ஜன்னாவிடம் வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொண்ட மிஃப்தாவுல் ஜன்னா, சுமார் ஆறு மாத காலம் கழித்து சன்வர் அலியின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு சென்ற சன்வர் அலி, மிஃப்தாவுல் ஜன்னா மற்றும் அவரது குடும்பத்தினரை முதன் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.

இருவரது குடும்பத்தினரும் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் அவர்கள் திருமணத்திற்கும் சம்மதம் சொல்லியுள்ளனர். இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் இந்தோனேசியா சென்ற சன்வர் அலிக்கும், மிஃப்தாவுல் ஜன்னாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளுக்கு திட்டம் போட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. இதனால், திருமண வேலைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சன்வர் – ஜன்னா திருமணம் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம், உத்தர பிரதேச மாநிலம், தியோரா மாவட்டத்தில் வைத்து அவர்களின் திருமண வரவேற்பும் நடந்துள்ளது. ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆங்கிலத்தின் உதவியுடன் இந்தோனேஷியா பெண்ணுடன் காதலித்து அவரை இந்திய இளைஞர் திருமணமும் செய்து கொண்ட செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.