வேலூரில்..
காதலிச்சு, பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்ட பின், சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஜோடி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக கணவர் இறந்த நிலையில், காதல் கணவர் இறந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஷர்மிளா (30). ஷர்மிளா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெரியவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கார்த்திக் கடந்த மாதம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது காதல் கணவர் திடீரென தற்கொலைச் செய்து கொண்டதால் ஷர்மிளா மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
மகள் பித்து பிடித்தாற்போன்று இருப்பதால், மகளைத் தனியே விடாமல், அலமேலுமங்காபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு குழந்தையுடன் அழைத்து சென்றுள்ளார் ஷர்மிளாவின் தாய்.
கணவரின் மரணத்தால், துக்கம் தாங்காமல் அடிக்கடி ஷர்மிளா மிகவும் மனஉளைச்சலுக்குள்ளாகி தனிமையில் அழுததாகவும், அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி தேற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஷர்மிளா மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
வெளியே சென்றிருந்த ஷர்மிளாவின் தாயார், சிறிது நேரத்துக்கு பின்னர் வீட்டிற்கு திரும்பிய நிலையில், மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஷர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஷர்மிளாவின் தந்தை சௌந்தரராஜன் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் கணவர் இறந்த ஒரு மாதத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.