சென்னையில்..
சென்னை அருகே அதிகமாக செல்போன் பயன்படுத்துவதாகத் தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தவர் ஸ்ரீமதி. இவர் குரோம்பேட்டை பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
பின்னர் மயிலாடுதுறையிலிருந்த அவரின் பெற்றோரும், மகளின் உதவிக்காகச் சென்னைக்கே வந்து தங்கியுள்ளனர். இந்நிலையில் கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது மாணவி ஸ்ரீமதி செல்போன் எடுத்து வந்துள்ளார்.
இதைப்பார்த்த ஆசிரியர் அவரிடம் இருந்து செல்போனை வாங்கிக் கொண்டு அவரது தாய்க்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அவரது பெற்றோர்கள் மகளைக் கண்டித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஊரிலிருந்த வீட்டினை காலி செய்வதற்காக பெற்றோர்கள் மயிலாடுதுறைக்குச் சென்றுள்ளனர். பிறகு மகள் ஸ்ரீமதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் அவர் எடுக்கவில்லை.
பிறகு , அழைப்பு வந்ததைப் பார்த்துப் பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளார் ஸ்ரீமதி. அப்போது அவரின் தாய், எப்பொழுதும் செல்போனை பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றாய். ஆனா நாங்க கால் பண்ணும்போது மட்டும் உன்னால் எடுக்க முடியவில்லையா என திட்டியுள்ளனர். பின்னர் மீண்டும் மகளுக்கு போன் செய்தனர்.
அப்போதும் மகள் எடுக்கவில்லை. பல முறை முயற்சி செய்தும் மகளை அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து வீட்டின் அருகே உள்ள நபருக்கு போன் செய்து மகளிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர்.
பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஸ்ரீமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ஸ்ரீமதி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.