ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் : செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!!

458

மும்பையில்..

மும்பையையொட்டி இருக்கும் நவிமும்பையை அடுத்த தாம்னி என்ற கிராமத்தில் ஓடும் காதி ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், பெண் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து ஆற்றில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.

நவிமும்பை குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் கொலைசெய்யப்பட்ட பெண் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதையடுத்து போலீஸார் நவிமும்பையில் காணாமல்போன பெண்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்தனர். ஆனால், அதில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உதவி இன்ஸ்பெக்டர் பிரவின் தலைமையிலான குழு இது குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைத்தது.

கொலைசெய்யப்பட்ட பெண் காலில் செருப்பு அணிந்திருந்தார். அந்த செருப்பில் கடை ஒன்றின் பெயர் இருந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி பிரவின் பேசுகையில், “கொலைசெய்யப்பட்ட பெண் அணிந்திருந்த செருப்பில் குறிப்பிடப்பட்ட செருப்பு கடையின் அனைத்து கிளைகளுக்கும் சென்று கொலைசெய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை காட்டி விசாரித்தோம்.

வாஷியில் ஒரு கடையில் அந்தப் பெண் செருப்பு வாங்க வந்ததாக சேல்ஸ்மேன் ஒருவர் தெரிவித்தார். உடனே அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தபோது அந்தப் பெண்ணுடன் உடல் திடகாத்தமான ஒருவரும் வந்திருந்தது தெரியவந்தது.

உடனே அந்தப் பெண்ணின் பெயர் ஊர்வசி (27) என்று அடையாளம் கண்டுபிடித்தோம். அவர் வேலை செய்த இடத்துக்குச் சென்று அவர் குறித்து விசாரித்தபோது ஊர்வசி வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது. அவர் பீர் பார் ஒன்றில் வேலை செய்துவந்தார்.

அவருடன் இருந்த நபர் ரியாஸ் கான் என்று அடையாளம் காணப்பட்டது. தேவ்னார் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ஜிம் பயிற்சியாளராக இருக்கிறார். அதோடு அவருக்கு ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருக்கின்றனர்.

புதிதாக பீர் பார் வந்தபோது ரியாஸ் கானுக்கு, ஊர்வசியுடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டது. ஊர்வசி தன்னைத் திருமணம் செய்யும்படி ரியாஸை கட்டாயப்படுத்தினார்.

ஆனால் ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில், மீண்டும் திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ரியாஸ். இதனால் ஊர்வசி, `வீட்டில் வந்து பிரச்னை செய்துவிடுவேன்.

போலீஸில் புகார் செய்வேன்’ என்று மிரட்டியிருக்கிறார். உடனே ஊர்வசியைக் கொலைசெய்ய திட்டம் தீட்டினார் ரியாஸ் கான். இதற்காக, தன் நண்பன் இம்ரான் ஷேக் உதவியை நாடினார். இம்ரான் ஷேக், ரியாஸ் கானுக்கு பணம் கொடுத்திருந்தார்.

அந்தப் பணம் வேண்டுமானால் பெண் ஒருவரைக் கொலைசெய்ய தனக்கு உதவ வேண்டும் என்று ரியாஸ் கான், இம்ரான் ஷேக்கிடம் கேட்டுக்கொண்டார். இம்ரானும் அதற்கு ஒப்புக்கொண்டார். உடனே ரியாஸ் ஷேக் ஊர்வசியை கடந்த 13-ம் தேதி தன் காரில் அழைத்துக்கொண்டு ஷில்பாடா நோக்கிச் சென்றார்.

ஏற்கெனவே ஊர்வசியைக் கொலைசெய்ய தயார் செய்து வைத்திருந்த இம்ரான் ஷேக்கை செல்லும் வழியில், காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். காரில் செல்லும் வழியிலேயே ஊர்வசியைக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கின்றனர்.

பின்னர் உடலை ஆற்றில் போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்” என்றார். மிகவும் சிக்கலான வழக்கைக் கண்டுபிடிக்க செருப்பு உதவியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அந்த இருவரையும் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.