காதலிக்க மறுத்த பள்ளி மாணவிமீது தாக்குதல் : போலீஸ் தேடியதால் இளைஞர் விபரீத முடிவு!!

272

வேலூரில்..

தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை ஓடும் பேருந்திலேயே தாக்கிவிட்டு தப்பிஓடிய இளைஞர், போலீஸ் விசாரணைக்குப் பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலிருக்கும் எல்லப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரின் 20 வயது மகன் மணிகண்டன், டிராக்டர் ஓட்டும் வேலை செய்துவந்தார். இந்த இளைஞர், தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்புப் படித்துவரும் 15 வயதே ஆகும் சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார்.

அந்தச் சிறுமி தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பேருந்தில் சென்றுத் திரும்புவது வழக்கம். காலை, மாலை நேரங்களில் மாணவிச் செல்லும் பேருந்திலேயே பயணித்து, தன்னை காதலிக்குமாறுக் கூறி மிரட்டவும் செய்தாராம் மணிகண்டன். நேற்று காலையிலும் மாணவி பள்ளிக்குப் பேருந்தில் சென்றபோது, அருகில் நின்று பேச முயன்ற மணிகண்டனை மாணவி ‘ஏதோ’ திட்டியிருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ஓடும் பேருந்திலேயே மாணவியை தாக்கிவிட்டு, பேருந்தில் இருந்து கீழே குதித்திருக்கிறார். இதில், இளைஞரின் தலையிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. யாரிடமும் சிக்காமல் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்திருக்கிறார். விரைந்து வந்த பெற்றோர், மாணவியை அழைத்துக்கொண்டு வேப்பங்குப்பம் காவல் நிலையம் சென்று புகாரளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், மணிகண்டனை விசாரணைக்கு அழைத்து வருவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், அவரது பெற்றோரை காவல் நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

நண்பர்கள் மூலம் இந்தத் தகவலை தெரிந்துக்கொண்ட மணிகண்டன், பள்ளிகொண்டா அடுத்த பள்ளிக்குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு பாட்டியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, அந்த ஊரிலுள்ள அரசுப் பள்ளியின் பின்புறம் சென்ற மணிகண்டன் போலீஸ் விசாரணைக்குப் பயந்து, அங்குள்ள வேப்பமரத்தில் கயிற்றைக் கட்டி அதில் தூக்குப்போட்டு தற்கொலைச் செய்துகொண்டிருக்கிறார்.

தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்த மணிகண்டனின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பள்ளிகொண்டா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டபோது, அங்குத் திரண்ட மணிகண்டனின் உறவினர்கள் சடலத்தை தர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸாரின் சமசர பேச்சுவார்த்தையை ஏற்று அவர்கள் சடலத்தை ஒப்படைத்தனர்.

பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உடல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.