ஆற்றில் மூழ்கிய பள்ளி 2 மாணவர்களுக்கு நேர்ந்த கதி : தொடரும் சோகம்!!

310

தமிழகத்தில்..

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டில் முழு ஆட்டம் போட்டு வருகின்றனர். தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

நீர்நிலைகளில் குழந்தைகள், பிள்ளைகளை தனியாக விளையாடவோ, குளிக்கவோ தனியாக அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கைப் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

விழுப்புரம் பானாம்பட்டு ராகவேந்திரா கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் 13 வயது உதயா .இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலசுப்பிரமணி (14). இவர், பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று விடுமுறை தினமானதால் நண்பர்கள் உதயா, பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் தங்கள் நண்பர்கள் 4 பேருடன் விழுப்புரம் அருகே அய்யன்கோவில்பட்டு பம்பை ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் அவர்கள் 6 பேரும் இறங்கி குளிக்கத் தொடங்கினர்.

இதில் 3பேர் மட்டும் சிறிது நேரம் கழித்து கரையேறிய நிலையில் மீதமுள்ள 3 பேரும் சுழலில் சிக்கி மாயமாகினர். அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…. என கத்தி கூச்சலிட்டனர். இதில் ராம்குமார் மகன் சங்கர் (13) என்பவரை மட்டும் மீட்டனர்.

அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே ஆற்றில் மூழ்கிய உதயா, பாலசுப்பிரமணி ஆகிய இருவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்கள் இருவரையும் வெகுநேரம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதன் பிறகு வந்து சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறை பாதுகாப்பு உபகரணங்களுடன் தடுப்பணையில் இறங்கி மாயமான 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு முதலில் பாலசுப்பிரமணியின் உடலையும், அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து உதயாவின் உடலையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அவர்களின் இருவரின் உடலையும் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி துடித்தனர். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நண்பர்களுடன் குளிக்க சென்றவர்கள் உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.