திருமணத்திற்காக பண உதவி கேட்டு வந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : சுவாரஸ்ய சம்பவம்!!

2713

மதுரையில்..

மதுரையை சேர்ந்த தம்பதி பாஸ்கர் மற்றும் சித்ரா தேவி. இவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக வேலை தேடி கேரள மாநிலம் கொச்சி அருகே சென்றதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த தம்பதிக்கு நர்மதா மற்றும் பவித்ரா என இரு மகள்கள் உள்ளனர். இதில் நர்மதாவுக்கு மூன்று வயது இருக்கும் போது அவரது தந்தை பாஸ்கர் விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு அதிர்ச்சியும் நர்மதா மற்றும் அவரது சகோதரிக்கு காத்திருந்துள்ளது. அவரது தாயும் மின்சாரம் தாக்கி உயரிழிந்த காரணத்தினால் சிறு வயதிலேயே பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளாக தவித்துள்ளனர்.

இதற்கடுத்து, சிறுமிகள் இருவரும் காப்பகம் ஒன்றின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இருவரும் பெரிதாக வளர்ந்த நிலையில், இதில் பவித்ராவிற்கு கடந்த 4 மாதங்கள் முன்பு திருமணம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மறுபக்கம் நர்மதாவுக்கு தாய் மாமனான கண்ணன் வரன் தேடிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. மேலும் மருமகளின் திருமணத்திற்காக நிதி உதவி திரட்டியும் வந்துள்ள கண்ணன், ஆலுவா பகுதியில் உள்ள ரவீந்திரன் என்பவரின் வீட்டிற்கு கொத்தனார் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

அங்கே ரவீந்திரனிடம் தனது மருமகள் நிலை குறித்து எடுத்துக் கூறி நிதி உதவியும் கேட்டுள்ளார் கண்ணன். ஆனால், நிதி உதவி செய்வதற்கு பதிலாக, இளம் பெண் நர்மதாவின் நிலை பற்றியும் சிந்தித்துள்ளார் ரவீந்திரன்.

தனக்கு திருமணமாகாமல் ராகுல் என்ற மகன் இருப்பதால் அவருக்கு நர்மதாவை திருமணம் செய்து வைத்தால் என்ன என்றும் ரவீந்திரன் யோசித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க, மகன் ராகுல் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. அதன்படி, புத்தாண்டு தினத்தில் ராகுல் மற்றும் நர்மதா ஆகியோரின் திருமணமும் நடந்து முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மருமகளின் திருமணத்திற்காக நிதி உதவி கேட்ட இடத்தில், அந்த பெண்ணையே சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மருமகளாக ஏற்றுக் கொண்டுள்ள விஷயம் தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.