12 வயதில் 50 ரூபாய் சம்பளம் : 56 வயதில் 10 கோடி வாங்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!!

275


இசைப்புயல்..“இசை இன்றி அமையாது உலகு” பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் பயணிக்கும் வல்லமை கொண்டது இசை. இசைக்கருவிகளை கொண்டு மட்டும் இசைப்பது இசையல்ல.அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் இசை இணைந்திருக்கிறது. இந்த இசையை இன்னும் மேம்படுத்தி செவிக்கு இனிமையாக்கிய இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய பதிவுதான் இது.
இன்று போல் ஒருநாளில் 1967ஆம் ஆண்டு பிறந்தார் ஒஸ்கார் நாயகன். பிறக்கும் போதே இசையை அழுகையாய் அழைத்து வந்துவிட்டார் போல. அன்று தொடங்கி இன்று வரை உலக சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இசையாய்.


தமிழ்நாட்டில் கஸ்தூரிக்கும் ஆர். கே. சேகருக்கும் மகனாக பிறந்தவர் தான் அருணாச்சலம் சேகர் திலீப் குமார். இவரது குடும்பமே ஒரு இசைக்குடும்பம். திலீப்குமாரின் தாத்தா ராஜகோபால் பாகவதர் அந்தக்காலத்தில் ஒரு சிறந்த பாடகர். அதன் மரபணுதான் இன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இவருக்கு நான்கு வயதிலேயே இசையின் மேல் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் திலீப்பை பிரபலமான பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியில் சேர்த்தனர்.


அவருக்கு புத்தக படிப்பை விட, இசை படிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. தனது 9 வயதில் தந்தையை இழந்து வறுமையில் ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற பெரிய சுமை திலீப்குமார் கையில் சென்றது.

தனது தந்தையின் இசைக்கருவிகளை அடகு வைத்து இசைக்கருவிகளை வாசிக்கக்கற்றுக் கொண்டார். திலீப்குமார் தனது 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்து பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி வந்தார்.

நாளடைவில் திலீப்பிற்கு, புதிய புதிய மேல் நாட்டு பாணி இசைக் குழுவினரோடு இசையமைப்பு பணியில் தீவிரமாய் செயல்பட்டார். ராக், டாப் போன்ற இசைக்குழுக்களில் பணியாற்றினார்.

நாட்கள் நகர நகர திலீப்குமாரின் வளர்ச்சியும் இசையும் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டது. இசைக்கருவிகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த திலீப்குமார் ஏராளமான விளம்பரப்படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். அது அப்படியே செல்ல செல்ல திரைப்படங்களுக்கு இசையமைக்க காரணமாகியிருந்தது.

1988ஆம் ஆண்டு திலீப்குமாரின் சகோதரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எல்லா வைத்தியங்களும் செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை. அதனால் தனது முஸ்லிம் நண்பர்கள் பிர்காதர் என்பவரை சந்திக்கச் சொல்ல அவரும் அவர்களை சந்தித்து பிர்காதாரின் பிரார்த்தனைகள் மற்றும் ஆசிகளால் அவர் உயிர்ப்பிழைக்க தங்களின் குடும்பமே பிர்காதிரை பின்பற்றி முழு முஸ்லிமாக மாறினார்கள்.

அன்றிலிருந்து தான் திலீப்குமார் அல்லா ரக்கா ரகுமானாக மாற்றம் பெற்றார். பெயர் மாற்றம் பெற்ற நேரத்திலிருந்து ரகுமானுக்கு கிடைத்த அதிஷ்டம் மணிரத்தினத்தின் வாய்ப்பு தான். இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநனராக இருந்த மணிரத்தினம் ஏ.ஆர்.ரகுமானின் இசையை பாராட்டி தனது படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார்.

வித்தியாசமான முறையில் படப்பிடிப்பு நடத்தும் மணிரத்னம். அவருக்குக்கேற்றால் போல் எல்லாவற்றையும் மறந்து உருவாக்கினார் ரோஜா படப் பாடல்களை இரவும் பகலும் எல்லாவற்றையும் மறந்து கடுமையான உழைப்பால் உருவாக்கிய படைப்புதான் ரோஜா.

முதல் படமே பட்டித் தொட்டியெல்லாம் பெரிய அளவில் உச்சம் பெற்றது. ஒரு படத்தில் வந்த அனைத்துப்பாடல்களும் அனைவரின் மந்திரமாக மாறத் தொடங்கியது.

முதல் வெற்றிக்குப்பின் ரகுமானுக்கு வாய்ப்பு வரிசைக் கட்டத்தொடங்கியது. திருடா திருடா, ஜெண்டில்மேன், பம்பாய், என அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இந்நிலையில் இந்தியாவில் 50ஆவது சுததந்தின நாளில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டுச் சேர்த்தது. பின் ஒவ்வொரு படத்திலும் புதுமையான, துள்ளலான, மெலொடியான இசையால் பல மேடைகள் காண வழிவகுத்தது.

ஏ.ஆர்.ரகுமான் தனது 12 வயதில்50 ரூபாயை முதல் சம்பளமாக வாங்கிய நிலையில், தற்போது தனது 56 வயதில் 8 முதல் 10 கோடி சம்பளமாக பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இசைப்பயணம் சொந்த தாயகத்தோடு நின்று விடாமல் சர்வதேச அளவில் பேசப்பட வேண்டும் என டானி பாயில் என்ற ஹொலிவூட் இயக்குனரின் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ என்ற ஆங்கிலப் திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அந்த ஆண்டிற்கான ஒஸ்கார் விருது கிடைத்தது.

இத்திரைப்படத்திற்கு ஒன்றல்ல இரண்டு ஒஸ்கார் விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்நிகழ்ச்சியிலும் எல்லாப்புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசி மாபெரும் இரசிகர் கூட்டத்தை அள்ளிக் கொண்டார்.

இன்றும் புதிய இசை தற்போது வரலாற்றுத்திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய வசூலைப் பெற ரஹ்மானின் இசையும் ஒரு காரணம். வாள் வீச்சையும் சண்டைக் காட்சிகளை தியேட்டர்களில் பார்க்கும் போது கண்முன் நடப்பது போல தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.மேலும் தற்போதும் புதிய புதிய திரைப்படங்களில் புதிய புதிய இசை மழையில் இன்னும் நாம் நனையலாம் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.