தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்குச் சென்ற கணவனிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லையெனவும், அவரை மீட்டுத்தருமாறு குறித்த நபரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவிற்கு கடந்த 2012ம் ஆண்டு வேலைக்காகச் சென்ற எனது கணவன் இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி என்னுடன் கதைத்தார்.
அம்மாதம் இலங்கை வருவதாக கூறினார். ஆனால் இதுவரை அவர் வரவுமில்லை, அவரிடமிருந்து எதுவித தொடர்புமில்லை. பயமாகவிருக்கிறது. எனது கணவரை மீட்டுத்தாருங்கள்.”
இவ்வாறு சவுதிக்குச் சென்று இதுவரை எவ்விதத் தொடர்பில்லாமலிருக்கும் மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த சின்னத்தம்பி நவரெட்ணம் ஜெயசீலன் (28) என்பவரது மனைவி திருமதி ஜெ.சுதர்சினி, காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தித் தாபனத்திடம் மன்றாட்டமாக முறைப்பாடு செய்துள்ளார்.
மனித அபிவிருத்தித் தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார். இது தொடர்பாக மனைவி சுதர்சினி மேலும் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாவது..
மட். நொச்சிமுனையைச் சேர்ந்த எனது கணவர் சி.ந.ஜெயசீலன் கடந்த 2012.03.20ம் திகதி சவுதி அரேபியாவிற்கு தொழில் தேடிச் சென்றார். அங்கு ஒரு கம்பனியில் சேர்ந்து 1வருடம் வேலை பார்த்தார். அங்கு சம்பளம் போதாது என்று கருதிய அவர் வேறொரு கம்பனியைத் தேடி அலைந்தபோது 2013.03.19 இல் சவுதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
அவரது நண்பர்களின் தொலைபேசி மூலம் அதனை அறிந்தோம். பின்பு அவர் ஜெயிலில் இருந்து கதைத்து வந்தார்.
இறுதியாக 2013.12.15ம் திகதி தொடர்பு கொண்டார். தன்னுடனிருந்த பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் தான் இம்மாதம் இலங்கைக்கு வருவேன் என்றும் கூறினார். ஆனால் அவர் வரவுமில்லை. அவரிடமிருந்து அதன்பிறகு எதுவித தொடர்புமில்லை.
அவர் சவுதியிலிருந்து வந்தாரா இல்லையா என்பது கூட தெரியாமலுள்ளது. வர வரப் பயமாகவிருக்கிறது. எனவே உரியவர்களுடன் தொடர்புகொண்டு எனது கணவரை மீட்டுத்தாருங்கள்.
மனித அபிவிருத்தித் தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உரிய தரப்புகளுடன் தொடர்பை மேற்கொண்டுள்ளார்.





