நடு வீதியில் தந்தையின் கண்முன்னே இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

503

திருநெல்வேலியில்..

நொடி பொழுதில் நடைப்பெறுகிற சில சம்பவங்கள் வாழ்நாளுக்குமான சோகத்தையும், துயரத்தையும் தேக்கி வைத்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும் தனது தங்கையைப் பார்க்க ஆசையாசையாக சென்ற அக்காள், பேருந்து சக்கரத்தில், தந்தையின் கண்முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, நிலைதடுமாறி, மகராசி மீது மோதி, இழுத்து சென்றதில் பேருந்தின் ஓட்டுநர் ஸ்டீயரிங் மீது மயக்கமடைந்து விழுந்து கிடந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். அந்த பகுதியில் கூலி வேலைச் செய்து வரும் ஜெயபாலுக்கு மகராசி(22), செல்வி என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

பெரிய மகள் மகராசி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து முடித்த நிலையில், 2வது மகள் செல்வி தற்போது அதே கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் செல்வியைப் பார்த்து விட்டு வருவதற்காக நேற்று ஜெயபாலும், மகராசியும் பைக்கில் நாகர்கோவிலுக்குப் புறப்பட்டு சென்றனர்.

இவர்களது இருசக்கர வாகனம், காவல் கிணறு – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய் மொழி பகுதியில் வந்த போது, அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர், வாகனத்தை எடுக்க இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எதிரே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து வேகமாக ஓட்டுநரின் கட்டைப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மகராசி, ஜெயபால் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனம் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில், பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் மகராசி உயிரிழந்தார்.

மேலும் ஜெயபால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்ஐ ராஜமணி, ஏட்டு உதயா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் மகராசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ் ஸ்டியரிங்கில் மயங்கி கிடந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பைக்கோடு இழுத்து செல்லப்பட்ட ஜெயபாலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.