3 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை!!

712

Abuseஇந்தியாவின் ஓசூரில் 3 வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா(27). அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவுக்கும் தர்மபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்த பழனி என்பவருக்கும் திருமணம் நடந்தது.

அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா கணவரை பிரிந்து ஓசூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் முத்து, பவளக்கொடி என்ற வயதான தம்பதியுடன் தங்கியுள்ளார்.

அவர் சில வீடுகளில் பாத்திரம் கழுவி சம்பாதித்து வருகிறார். வேலைக்கு செல்லும்போது குழந்தையை அந்த தம்பதியிடம் விட்டுச் செல்வார். கடந்த 11ம் திகதியும் குழந்தையை அந்த தம்பதியிடம் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்றார்.

மாலையில் வீடு திரும்பியபோது குழந்தை மர்மமான முறையில் இறந்துவிட்டதாகக் கூறி அவர்கள் உடலை கொடுத்துள்ளனர். குழந்தையின் உடல் முழுவதும் காயம் இருந்தது.

இதையடுத்து அவர் குழந்தையின் உடலை தூக்கிக் கொண்டு தனது கணவரைத் தேடி சென்றார். அவரை பார்க்க முடியாமல் போனதால் ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி.செட்டிப்பட்டிக்கு சென்றார். அங்கு ஊர்மக்கள் மல்லிகாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பொலிசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் மல்லிகா இருக்கும் வீட்டுக்கு அருகே வசிக்கும் இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.