வவுனியாவில் புழுக்களுடன் விற்பனை செய்யப்பட்ட இறைச்சி : சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு!!

517

வவுனியா இறைச்சி விற்பனை நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இறைச்சியில் புழுக்கள் காணப்பட்டதாக சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாட்டிறைச்சியை கொள்வனவு செய்த ஒருவர் தனது வீட்டிற்கு கொண்டு சென்று பார்வையிட்டபோது அதனுள் சிறிய புழுக்கள் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து இறைச்சியுடன் வவுனியா சுகாதார வைத்திய பணிமனைக்குச் சென்றபோது பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றபோது வவுனியா பொலிஸார் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யுமாறு பணிக்கவே சம்பந்தப்பட்ட நபர் பிரதேச செலயகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மீண்டும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.

மீண்டும் புழுக்கள் நிறைந்த இறைச்சியுடன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குச் சென்று முறையிடவே அவர்கள் கடிதமொன்றை தருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர். எனினும் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரியவருகின்றது.

அண்மைக்காலமாக சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதால் சுகாதார சேவைகள் முடக்கப்பட்டுள்ளனன. அத்துடன் கால்நடைகளை பீடித்த ஒருவகை நோய் காரணமாக நாடளாவிய ரீதியில் மாட்டிறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டிருந்த அதேவேளை பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் கால்வாய் எனப்படும் ஒருவகை தொற்றுநோய் கால்நடைகளுக்கு ஏற்பட்டதாக இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

60 61