மனைவிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

3795

மத்திய பிரதேசத்தில்..

நாளுக்கு நாள் நாடு முன்னேறி கொண்டிருக்கிறது என மக்கள் அனைவரும் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில், சில மாநிலங்களில் இருக்கும் மக்கள் மனநிலை பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது.

பெண் சிசு கொலையை தடுக்க பலரும் போராடி தடுத்திருக்கும் நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்தால் குழந்தையை தானே கொல்லக்கூடாது, தற்கொலை செய்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் நபர் ஒருவர் முடிவெடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவ் பாட்லே. மார்பில் ட்ரெடிங் தொழில் செய்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமா ஆனது. 6 மற்றும் 4 வயதில் பெண் குழந்தை இருக்கும் இந்த தம்பதியினர், ஒரு ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டுள்ளனர்.

எனவே இவரது மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். வாசுதேவ் பாட்லேவுடன் பிறந்தவர்கள் 4 பேர்; அதில் இவர் மட்டுமே ஆண் பிள்ளை. எனவே இவருக்கு ஒரு குழந்தையாவது ஆண் பிள்ளையாக இருக்கவேண்டும் என்று மிகுந்த ஆசையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இவரது மனைவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவம் ஆகியுள்ளது. அப்போது இவருக்கு பெண் குழந்தை, அதுவும் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. பிறக்கப்போகும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று கனவு கண்ட இவருக்கு, அது நிராசையாய் போயுள்ளது.

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்கு மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் வாசுதேவ் மிகவும் வேதனை அடைந்துள்ளார். இதனால் மனம் நொந்துபோன அவர், மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு நேற்றைய முன்தினம் மாலை சுமார் 7 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இருந்து சில கி.மீ., தள்ளியுள்ள வனிகங்கா என்ற ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாரோ ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை பார்த்த அருகிலிருந்த நபர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வாசுதேவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வாசுதேவ் என்றும், அவர் ஒரு தொழிலதிபர் என்றும் தெரியவந்தது.

மேலும் சுமார் 15-20 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இவருக்கு, அண்மையில் இரட்டை பெண் குழந்தை பிறந்ததால் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மனைவிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் மனம் நொந்துபோன கணவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.